வெள்ளி, 17 ஜூலை, 2009

முரண்பாடுகள்


ஆலமரத்து விழுதில் ஆடிய ஆகாய ஊஞ்சல் .....

அறுபதடி கினற்றில் மேலிருந்து அடித்த அந்தர் பல்டி....

ஆளுயர சணப்பை வயலில் நாள் முழுக்க கண்ணாமூச்சி...

தெருகூத்து பார்க்க போட்ட முதல் வரிசை சண்டை ....

விடிய விடிய சாமி ஊர்வலத்தில் யார் வீட்டு திண்ணையிலோ தூக்கம் ....

கூத்தில் கோமாளிக்கு போட்ட தவக்களை மாலை...

கனவில் வந்து மிரட்டிய தெருகூத்து சூரன்...

தினமும் சிகெரெட்வாங்கி வர அப்பா கொடுத்த காசின் மீதியில் வாங்கி சாப்பிட்ட கமர்கட் ,தேன் முட்டாய்...

காசு முட்டாய் வாங்கி சப்பியத்தில்
தெரிந்த பத்து காசின் மகிழ்ச்சி...

ஓணானை பிடித்து உயிருடன் புதைத்து
மறுநாள் தோண்டி கிடைக்காத காசின் ஏமாற்றம்... .

மணிக்கு ஐந்து ரூபாய் கொடுத்து கற்று கொள்ள
வாடகைக்கு எடுத்து வந்த குட்டி மிதிவண்டி ....


மிதிவண்டி கற்றுகொள்ளும்போது இடுப்பை வளைத்ததில்
அண்ணனிடம் முதுகில் வாங்கிய குத்து..


எல்லார் வீட்டிலிருந்தும் ஒரு பொருளை கொண்டு
செய்து சாப்பிட்ட கூட்டாஞ்சோறு ....

பனை ஏறி நுங்கு பெரிக்கையில் மரத்துக்காரன் சத்தம் கேட்டு
குதித்து ஓடியவனை காலிடறி விட்டு ஓடிய நண்பன் ......

மரமேறி மாங்காய் பெரிக்கையில்
கால்சட்டையை சொரட்டு கோலால் மாட்டி இழுத்த தோப்புக்காரன் .....

களத்துமேட்டில் அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து திரும்புகையில் மிதிவண்டியோடு தூக்கி அடித்த சூறைக்காற்று....

மாட்டு பொங்கலன்று பலூனை ஊதி சைக்கிள் மர்கார்ட் கம்பியில் சுறுட்டி கட்டி

டர்ர்ர் சத்தத்துடன் சுற்றிவந்த ஊர்வலம்...


யாரோ தூக்கு போட்டு தொங்கிய ஆலமரத்தை கடக்கும்போது உரக்க பாடிய பக்தி பாட்டையும் மீறி வரும் பயம்...

வைகுண்ட ஏகாதசி அன்று அத்தையுடன் டூரிங் டாக்கிசில்

விடிய விடிய பார்த்த ஒரே டிக்கெட்டில் நான்கு பக்தி படங்கள் ....

அடிக்கடி நான் அடம்பிடித்து பாட்டி செய்து கொடுக்கும்

கேழ்வரகு இனிப்பு அடை ...

அம்மா இடித்தபின் உரலில்

ஒட்டிஇருந்த சூடான இட்லி கொண்டு தொட்டு சாப்பிட்ட மிளகாய் பொடியின் சுவை ...

பள்ளிக்கூடம் போகாமல் போக்கு காட்டியவனை

துரத்தி துரத்தி அப்பா கொடுத்த துடுப்பு அடி....

திருக்குறள் சொல்லாதவனை ரத்தம் வர காதை திருகிய வாத்தியாரை
மறுநாள் உண்டிகல்லால் அடித்து ரத்தம் வரவைத்து
அன்றோடு பள்ளிக்கூடத்தை மறந்த என் நண்பன்....

எப்படி கன்டிப்பேன்? என் பால பருவத்தில்
பந்தம், பாசம், நட்பு,சொந்தம்,பகை, பக்தி, விளையாட்டு
என்று எல்லாமும் அனுபவித்துவிட்டு இடம்பெயர்ந்த
என் நகரத்து ஒன்டிகுடித்தன வாழ்கையால்
பால பருவத்தை எட்டுக்கு எட்டு சுவற்றுக்குள்
எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு பள்ளிக்கூடம் போக மறுக்கும்
என் மகனை ?

இராம.செங்குட்டுவன்