
ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின.
பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய், துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.
மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.
பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.
பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.
ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.
நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?
சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.
அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.
அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.
எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.
மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் என் uravugale..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக